மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதமரின் வருகையை முன்னிட்டு நேற்று(04-08-2023) இடம்பெற்ற கூட்டத்தில், அதிதிகளின் கதிரையை புறக்கணித்து மக்களில் ஒருவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்குபற்றியுள்ளார்.
இதன்போது இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்துகொள்கின்றனர் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே அவர் நேற்றையதினம்(04.08.2023) அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக அந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.
ஊழல்கள் பற்றிய ஆவணம்
இதேவேளை குறித்த கூட்டத்தில் அரசு சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதன்போது பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த ஊழல்கள், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் சாணக்கியன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.