பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக, சர்வதேச தராதரங்கள் பின்பற்றப்படும்வரை, அதனை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 54 அமர்வு நேற்று ஆரம்பமான நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையில், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அனைவரதும் பொருளாதார, சமூக, கலாச்சார, சுதந்திர உரிமைகள் உட்பட மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்ததை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச சட்டங்கள் மற்றும் தராதரங்களை முழுமையாக பின்பற்றும்வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இடைநிறுத்தி வைக்குமாறும் அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.