கல்முனை நகரை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ள நீரில் மூழ்கியது!



அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலே வெள்ள நீர் நிறைந்துள்ளது.

இதனால் இவ்வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுவதில் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொலனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரை எந்த அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்பது பெருங்குறையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாக பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. 

இதனால் நெற்பயிர்கள் அழுகி அழிந்துபோகும் நிலையில் காணப்படுவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை