உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நிரந்தர - ஆளுனர் நஸீர் அஹமட்வடமேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியாளர்களாக கடமையாற்றும் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்தாலோசனை ஒன்று இன்று(24-06-2024) வடமேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் நீண்ட காலமாகப் பணியாற்றுகின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதுதொடர்பான கலந்தாலோசனை ஒன்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதன்போது அதனை துரிதப்படுத்துமாறு கடந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அவர், உரிய அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்
இந்நிலையில் நமது மாகாணத்தில் இதுவரை காலமும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றிய எந்தவொரு நபரும் விடுபடாத வகையில் , சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு அவர்களுக்கு நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், தேவையேற்படும் பட்சத்தில் சிற்சில விசேட நிபந்தனைகளைத் தளர்த்துவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சு மூலமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.


அத்துடன் அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைப் பட்டியலில் உள்வாங்கப்படாத புதிய பணியாளர் குழாம் தொடர்பான அனுமதியைப் பெற்றுக் கொள்ள நேரிடும் பட்சத்தில் அதற்கான பட்டியல் ஒன்றைத் தனியாக சமர்ப்பிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்
வடமேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றும் எந்தவொரு நபரும் நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டில் விடுபடாது, அனைவருக்கும் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுப்பதே தனது இலக்கு என்றும், அதிகாரிகள் அதனை கவனத்திற் கொண்டு கூடுதல் கரிசனையுடன் செயற்படுமாறு ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
வடமேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியாளர்களாக செயற்படுகின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி நடைபெறும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே. குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சஞ்சீவனி ஹேரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை