அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு!



அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (15-08-2024) வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.



எரிந்து கொண்டிருந்த நாடு
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தை கூட கொண்டுச் செல்ல முடியாதென சிலர் கூறிய போது, இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நிலைக்கு கொண்டு வந்த தன்னிடம், இனிவரும் காலங்களிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான வலு இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்க முன்வராத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது பொருத்தமானதாக அமையுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.


எரிந்து கொண்டிருந்த நாட்டில் அந்த நிலைமையை தடுத்து இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அழிவைத் தடுக்க எதிர்க்கட்சிகள் எவரும் ஆதரவு வழங்கவில்லை.

அரசாங்கத்தை பதவி விலக சொல்லிவிட்டு அவர்களும் ஓடிவிட்டனர். அத்தகையவர்கள் ஆட்சியை பெறுவதற்குத் தகுதியானவர்களா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இன்று இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்றியுள்ளோம். நாடு வங்குரோத்தாகும் முன்பும் கூட மக்களுக்கு வழங்கப்படாத நிவாரணத்தை, வங்குரோத்தடைந்த காலத்தில் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.


மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.


மேலும், கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் மேலும் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் திட்டமும் எம்மிடம் உள்ளது.

தனியார் துறையிலும் சம்பளம்
மேலும், அரச தொழில்வாய்ப்புகள் வழங்கும் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம்.


தனியார் துறையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்தை நாம் அனைவரும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.


ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு தொடரப்பட்டு இந்நாட்டு மக்களை வளப்படுத்தக்கூடிய புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்படும்.


இன்று நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க செப்டம்பர் 21 ஆம் திகதி எனக்கு மக்கள் ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் புதிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் என்று தெரிவித்தார்.
புதியது பழையவை