அரச ஊழியர்களுக்கு ஒரு வருட விடுமுறை



அரச ஊழியர்கள் புதிய கற்கைநெறிகளை கற்பதற்கு ஒரு வருட விடுமுறை வழங்குவோம். அரச கொள்கை மற்றும் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்போம். இவ்வாறு துரிதமாக செய்யக்கூடிய பல திட்டங்கள் பற்றி சிந்திக்கிறோம்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


'ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்' என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று (29) வெளியிட்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


எதிர்காலத்தில் சலுகை அடிப்படையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டுக் கடன்களையும் வழங்குவோம் மத்திய தரத்தினருக்கும் கடன்களை வழங்குவோம். சிறு மற்றும் மத்திய தர தொழில்துறை பாதுகாப்பிற்காக தற்போதும் 50 பில்லியன்களை நாம் வழங்கியிருக்கிறோம்.


எமது பொருளாதார செயற்பாடுகளை காலநிலை அனர்த்தங்களுக்கு வழி செய்யாத வகையில் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். இவற்றோடு ஐந்து முக்கிய காரணிகள் உள்ளன.

முதலில் வாழ்க்கை சுமையைக் குறைக்க வேண்டும். அதற்காக ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்தாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்குவோம். மூன்றாவது வரிச்சலுகைகளை வழங்குவோம். அடுத்தபடியாக பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். அதனால் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதே இலக்காக உள்ளது.

பின்னர் 'உறுமய', 'அஸ்வெசும' திட்டங்களை செயற்படுத்துவோம். எனவே புதிய கொள்கைகளை கொண்டு வந்து விவாதித்துக் கொண்டிருப்பதை விடவும் மக்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கான திட்டங்களை செயற்படுத்துவோம்.

தொழில்வாய்ப்பு
அடுத்ததாக டிஜிட்டல் மயமாக்கலுக்கான பணிகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை இளையோருக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியுள்ளது. நான்கு வருடங்களாக எந்த தொழில்வாய்ப்புக்களையும் வழங்க முடியாமல் போனது.


நாம் முன்னேறும் போது தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். அதன் கீழ் ஸ்மார்ட் விவசாயம் செய்வதற்கான நிதி உதவிகளை வழங்க எதிர்பார்க்கிறோம். சுற்றுலா துறையிலும் இவ்வாறான தொழில்களை வழங்குவோம். அரசாங்கத்தின் கீழ் உள்ள தொழில்களுக்கும் உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தொழில் கல்வி பயில்வதற்கான வவுச்சர் ஒன்றை வழங்க எதிர்பார்க்கிறோம். தனியாரின் கீழ் செய்வதா அரசாங்கத்தின் கீழ் செய்வதா என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அதனால் தொழில் பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம். அதேபோல் அனைவருக்கும் ஆங்கில கல்வி என்ற திட்டமும் செயற்படுத்தப்படும்.

அரச ஊழியர்களுக்கு விடுமுறை
ஹிங்குரங்கொடையில் புதிய விமான நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டத்தை செயற்படுத்துவோம். அதேபோல் திருடர்களை பிடிப்பது பற்றி பேசுவோர் அதற்கான வழியை சொல்லவில்லை. ஆனால் நாம் அதற்குத் தேவையான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.


இவற்றை செயற்படுத்த நாடாளுமன்ற செயற்குழுக்களை அமைத்து சபாநாயகரின் கீழ் அவற்றை வழிநடத்துவோரை தெரிவு செய்வோம். தொழிற்சங்கத்தினர், சட்ட தொழில் செய்வோர், வர்த்தக துறை சார்பில் ஒருவர் என்ற அடிப்படையில் அந்த குழுக்களை வழிநடத்துவோரை தெரிவு செய்வோம்.

பெண்களை வலுவூட்டும் சட்டம் நிறைவேறியுள்ளது. அரச ஊழியர்கள் புதிய கற்கைநெறிகளை கற்பதற்கு ஒரு வருட விடுமுறை வழங்குவோம். அரச கொள்கை மற்றும் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்போம்.

இவ்வாறு துரிதமாக செய்யக்கூடிய பல திட்டங்கள் பற்றி சிந்திக்கிறோம். 2048ஆம் ஆண்டு வரையில் தூர நோக்கு சிந்தனையுடன் பார்த்து செயற்படுகிறோம். அதனை செய்ய முடியும் என்று சொல்பவர்களுடனேயே நாம் பயணிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை