சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் லஞ்சம் பெற்ற ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில ஊழல் அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலஞ்சமாக மதுபானபோத்தல்
குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவிற்கமைய, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் சில அதிகாரிகள் பயணிகளிடமிருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சொக்லேட் பார்சல்களை இலஞ்சமாகப் பெற்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி, விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள அதிகாரிகள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவரிடமிருந்து இரண்டு வெளிநாட்டு மதுபான போத்தல்களை இலஞ்சமாகப் பெற்றனர்.
அதேசமயம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அவர் மீண்டும் இலங்கையை விட்டு வெளியேறியபோது, விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் இருந்த அதிகாரிகள் 2 வெளிநாட்டு மதுபான போத்தல்களை ஒரு சொக்லேட் பார்சலையும் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியான தகவல்களை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனையடுத்து அந்தச் செயலில் ஈடுபட்ட ஒரு அதிகாரிக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையும் நடத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.