ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் முதலாம் தரமாணவர்களிடம் 500ரூபாய் பணம் பிள்ளைகளின் பெற்றோருடாக அறப்படுகின்றது.
மாணவர்களிடம் பணம் வசூலிப்பது கல்வி அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் சுற்றறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களுக்கு பணம் வசூலிப்பது ஏன் தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள்:
பாடசாலைகள் பாடங்களை படிப்பதற்கான இடம் மாத்திரமல்ல. மாறாக முன்மாதிரிகளை போதிக்கும் இடமாகவும் மாணவர்களிடம் வாழ்க்கை்கான, அதன் பிணைப்புக்கான உணர்வுகளை வலுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் இடமாகவும் அமைகிறது. எனவே ஆசிரியர் தின நிகழ்வுகளைத் தவிர்ப்பதை விட அதனை அர்த்தமுள்ளதாகவும் எளிமையாகவும் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும்.
அன்பளிப்பை விடவும் மேலான கொண்டாட்டங்கள்.
ஆசிரியர் தினத்தின் உண்மையான நோக்கம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், சேவையையும் கௌரவிப்பதாகும். பணத்தை மையப்படுத்திய பரிசுகளைத் தவிர்த்து, இதயபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கொண்டாடுவது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றுவதற்கு முயற்சிக்கலாம்.
மாணவர்களே சொந்தமாகத் தயாரிக்கும் நன்றியுணர்வுக் கடிதங்கள் அல்லது அட்டைகள் (Gratitude Notes) ஒரு விலையுயர்ந்த பரிசை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் பற்றி அதில் எழுதுவது உணர்வுப்பூர்வமானது. அவ்வாறான அட்டைகள் அல்லது கடிதங்களை குறிப்பிட்ட தினத்தில் ஆசிரியருக்கு பகிர்வது ஆசிரியர் மாணவர் தொடர்பை மேலும் அர்த்தப்படுத்தும். ஆசிரியருக்கு மிகப் பெறுமதியாக தமது பணி அடையாளப்படுத்தப்படுவதை உணர்வு பூர்வமாக அனுபவிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
2. நன்றியுணர்வுப் பதாகை அமைத்தல்.
பாடசாலை வளாகத்தில் ஒரு 'ஆசிரியர் நன்றியுணர்வுச் சுவரை' (Wall of Appreciation) உருவாக்கி, ஆசிரியர்களைப் பற்றிய பாராட்டுக் குறிப்புகள், கவிதைகள் அல்லது சிறிய ஓவியங்களை மாணவர்கள் ஒட்டுவதற்கு முயற்சிக்கலாம். இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். மாணவர்கள் வழங்கும் பாராட்டுக்குறிப்புக்களை விட பெறுமதியானதாக எந்தப் பரிசும் திருப்தி தராது.அவ்வாறே மாணவர்களின் பிரார்த்தனைகளை விட ஆசிரியர்களுக்கு பெறுமதிமிக்க எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. எனவே பகிரங்கமான இந்த சுவரில் மாணவர் ஆசிரியர்கள் தொடர்பான பிரார்த்தனைகளை அழகிய வடிவில் எழுதி ஒட்ட முடியும்.
இந்த சுவர் அல்லது பதாதைகளை பாடசாலையின் வாயில் பகுதியில் அல்லது முக்கியமாக அனைவரும் கூடும் இடத்தில் வைக்கலாம். இதனை ஓரிரு வாரங்களுக்கேனும் பாதுகாப்பது பொருத்தமாக இருக்கும்.
3. ஆக்கபூர்வமான கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
ஆசிரியர் தினத்தில் விசேட மன்றம் ஒன்றை மாணவர்களே .ஏற்பாடு செய்து, ஆசிரியர்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் நாடகங்கள், கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றை அரங்கேற்ற முடியும்.
மாணவர்களை அமரச்செய்து ஆசிரியர்கள் தமது திறமைகளை வௌிப்படுத்தி மாணவர்களை மகிழ்விக்கும் விதமான போக்கு பொதுவானதாகிவிட்டது. உண்மையில் அன்றைய தினம் ஆசிரியர்களைக் கௌரவிப்பதே நிகழ்வுகளின் முக்கிய குறிக் கோளாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் சேர்ந்து நடனமாடல், மற்றும் சினிமாப் பாடல்களைப் பாடுதல் முதலானவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்ல முன்மாதிரிகளை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் சமூகத ஊடகத் தளங்களில் பரவி பல ஆசிரியர்கள் சங்கடங்களை சந்தித்தமை நினைவுபடுத்தத் தக்கது.
4. நீண்டகாலப் பெறுமதி மிக்க செயற்பாடுகளைத் திட்டமிட முடியும்.
ஆசிரியர்களின் கௌரவத்தைக் குறிக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் ஒரு மரம் நடுதல் அல்லது மலர்த் தோட்டம் அமைத்தல் திட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்கலாம். இது நீண்ட கால பலன்தரக்கூடியதாக அமையும். நீண்ட கால நினைவுகளுக்கானதாகவும் அமையும்.
அவ்வாறே ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் பாராட்டும் வகையில், மாணவர்கள் குழுவாக இணைந்து ஒரு சமூக சேவைத் திட்டம் (உதாரணமாக பாடசாலை நூலகத்தைச் சுத்தம் செய்தல், முதியோர் இல்லத்திற்குச் செல்லுதல்) ஒன்றைத் திட்டமிடலாம். ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்திற்கென இவ்வாறான திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.
இறுதியாக, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் என்பது பணத்தின் மதிப்பால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. அது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் இதயபூர்வமாக அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு மதிப்பளித்து, பொருளாதாரச் சுமைகளைத் தவிர்த்து, பண்பு, அன்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர் தினத்தை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சியானதாகவும் கொண்டாடுவதுதான் ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசாகும்.