பாம்பு தீண்டிய நிலையிலும் மாணவன் உயர்தரப் பரீட்சை எழுதி - எல்லோரையும் நெகிழ வைத்த சம்பவம்.!

பாம்பு தீண்டிய உடல் வலியைத் தாங்கிக்கொண்டு, மருத்துவ சிகிச்சையின் நடுவிலும் தனது க.பொ.த உயர்தர இரசாயனவியல் பரீட்சையை விடாமல் எழுதிய பருத்தித்துறை மாணவனின் அர்ப்பணிப்பு நேற்று (21.11.2025)அனைவரையும் ஆச்சரியத்திலும் பாராட்டிலும் ஆழ்த்தியுள்ளது. 

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு பரீட்சைக்காக வந்த துஸ்யந்தன் சாத்வீகன் என்பவரை பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்தபோதே பாம்பு தீண்டியுள்ளது. 


ஆரம்பத்தில் அதிகம் கவனிக்காத அவர் பரீட்சை மண்டபத்துக்குச் சென்று அமர்ந்த பின்பு, காயத்தில் அதிக இரத்தம் வடிவதை கவனித்த நிலையில் உடனடியாக மேற்பார்வையாளர்களிடம் தகவல் தெரிவித்தார். 

துரிதமாகச் செயல்பட்ட அதிகாரிகள், மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றினர். அங்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், மருத்துவர்களின் கண்காணிப்பில் மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர் அசாத்திய துணிச்சலுடன் தனது பரீட்சையைத் தொடர்ந்து எழுதினார்.

பரீட்சை முடிந்ததும் அவர் மீண்டும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22.11.2025) பரீட்சைக்கும் ஆம்புலன்ஸ் மூலமே அழைத்து வரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை