மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகைகள்  நேற்று மாலை (22.11.2025) பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள் பழமை வாய்ந்த ஆலயங்கள் வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் உபதவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து அவற்றினை அகற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன .தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டது

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏனைய பெயர் பலகைகளை அகற்றும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக தவிசாளர் இதன்போது தெரிவித்தார். பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் இதன் போது மேலும் கருத்து தெரிவித்தார்.

இவ் நடவடிக்கையினை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
புதியது பழையவை