கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட 25,000 கொடுப்பனவானது குறித்த பிரதேச செயலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
டித்வா புயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவற்றுக்கு அரசினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (09.12.2025) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,608, அம்பாறை மாவட்டத்தில் 634, திருகோணமலை மாவட்டத்தில் 4,208 வீடுகளும் துப்பரவு செய்வதற்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
துரித கதியிலான செயற்திட்டங்கள்
கிழக்கில் 221 பாடசாலைகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதுடன் அவற்றை புனரமைக்க 131 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடைகள் போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் அவற்றுக்கு தேவையான ஒதுக்கீடுகள் குறித்தும் விரைவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும்.
மேலும் மாவிலாறு அணைக்கட்டு சேதமடைந்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, சேருவ, சிறிமங்கள புர, தெஹிவத்தை, நீலப்போல ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் குறித்த குளமானது சரியாக புனரமைக்கப்படாமையே இதற்கு காரணம், அதனை வெகுவிரைவில் புனரமைப்பது தொடர்பாக துரித கதியிலான செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.