மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு - வழக்கு ஒத்திவைப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35 ஆம் கிராம பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் 56 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் (29.01.2026)ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (25.11.2025)ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வெல்லாவெளி பொலிஸாரின் உதவியுடன் இந்த பெயர்ப்பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த பணியை இடைநிறுத்தியதுடன் அங்கிருந்தவர்களின் விபரங்களை பொலிஸார் சேகரித்துச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றைய தினம் (11.12.2025)களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இரு தரப்பினரின் வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கினை எதிர்வரும்(29.01.2025)ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில் சந்தேக நபர்களை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யுமாறு பணித்துள்ளார்.

போரதீவுப்பற்றின் கண்ணபுரம் மக்களுடன் பேசி குறித்த பகுதிகளில் பெயர்ப்பலகையினை இடுமாறு போரதீவுப்பற்று பிரதேச செயகலத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெயர்ப்பலகை நடச் சென்றபோது சமூக மட்ட அமைப்புகள் தமது எதிர்ப்பினை பதிவு செய்தாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.
இன்றைய தினம் 35ஆம் கிராமம் கண்ணபுர மக்களுக்கு ஆதரவாக மண்முனை தென்எருவில் பற்று களுதாவளை பிரதேசசபை,போரதீவுப்பற்று பிரதேசசபை,வெல்லாவெளி பிரதேசசபையின் தவிசாளர்கள்,உபதவிசாளர்கள்,உறுப்பினர்கள் வருகை தந்து பொதுமக்களுக்கு நீதிமன்றம் செல்ல தனது சொந்தமான வாகனவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்களுடன்  நீதிமன்றம் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை