ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி முத்துக்குமாரசாமிக்கு நினைவேந்தல்.!

ஈழ விடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மறைந்த தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று (24.01.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில், கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ. அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், கோவிந்தன் கருணாகரம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி செல்வராணி, திருகோணமலை மாவட்டத் தலைவி தேவி ஆகியோர் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியால் அமரர் தம்பித்துரை முத்துக்குமாரசாமியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்க உறுப்பினர்களால் பொதுச் சுடர் மற்றும் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கங்களால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை மட்டக்களப்பு மாவட்டத் தலைவியால் வாசிக்கப்பட்டதுடன், நினைவு உரைகளும் இடம்பெற்றன.
புதியது பழையவை