யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் - தி.வேல்நம்பி!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் (25.03.2026)தொடக்கம் துணைவேந்தர் ஆக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமனம் பெறுகிறார்.


அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.

அத்துடன் துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார். அதேவேளை சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு புத்தூர் மண்ணின் மைந்தர் ஆவார்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை