அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த பெண்ணொருவர், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத் பானு எனும் பெண்ணே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயாவார். குறித்த தாய் கருவுற்று 34 வாரங்கள் முழுமையடையாத நிலையில் (குறைமாதப் பிரசவம்), அவசர சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் ஆகியோரின் வழிகாட்டலில், மருத்துவக் குழுவினர் இந்த சவாலான பிரசவத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். தற்போது பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும், தாயாரும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் நல்வாழ்வை வேண்டி வைத்தியசாலை வளாகத்தில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வைத்தியசாலை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் தலைமையிலான குழுவினர், குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த அரிய பிரசவத்தை வெற்றிகரமாக கையாண்ட மருத்துவக் குழுவினருக்கு பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.