மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று வியாழக்கிழமை (05.02.2026)ஆம் திகதி முன்னெடுத்துள்ளனர்.
வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவானோர் மட்டக்களப்பு ,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட காலமாக கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழில்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தாங்கள் நீண்ட காலமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதுடன் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதுடன், தற்போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரம் மூலம் வலைகள் இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வேண்டாம் வேண்டாம் மீனவர்களின் தற்கொலைக்கு காரணமாக வேண்டாம்,வாழ விடு வாழ விடு கரைவலை மீனவர்களை வாழ விடு, நாடு அபிவிருத்தி அடைய வேண்டும்.
மீனவர்கள் கற்காலத்திற்கே திரும்பவேண்டுமா? மீனவர்களின் அவலநிலை உங்களுக்கு தெரியவில்லையா? போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய திணைக்களத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவரினால் தெரிவிக்கப்பட்டது.