நாடளாவிய ரீதியில் 2025 (2026) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நேற்று (26.02.2026)ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தன. இந்நிலையில், பரீட்சையின் இறுதி நாளன்று மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கமும், ஆசிரியர்கள் மீதான மரியாதையும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலின்படி, இம்முறை பரீட்சைகள் பின்வரும் அடிப்படையில் அமைந்தன.
நாடு முழுவதும் 3,545 நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.
மொத்தமாக 451,463 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள், ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமான முறையில் விடைபெற்றனர்.
பொதுவாக பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள் வீதிகளில் அநாவசிய கொண்டாட்டங்களில் ஈடுபடும் கலாச்சாரம் நிலவும் சூழலில், இம்மாணவர்கள் தமது ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
கல்லூரியின் அதிபர் திரு. க. சுவர்ணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வின் போது, வெறும் கல்வியறிவுடன் மாத்திரம் நின்றுவிடாமல், சமூகத்திற்குப் பயனுள்ள ஒழுக்கமான பிரஜைகளாக மாற வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவ சங்கத்தினர் மற்றும் கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருதும் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களின் இந்த நற்செயல், ஒரு சிறந்த சமூக மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.