இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில், மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று (05.02.2026) மாலை, போரதீவுப்பற்று பிரதேச சபைக் கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியில், சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலான பாரிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பிரதேச சபைத் தவிசாளரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் கட்சியின் பாராளுமன்றக் குழுவை வழிநடத்தும் பொறுப்பைப் பெற்றுள்ளமை, அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.