பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி - கிளிநொச்சியில் ஆரம்பமான அநீதிக்கான ஒன்றுகூடல்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கண்டன கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த அநீதிக்கான ஒன்றுகூடல் இன்று (14.02.2026) ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த கண்டனக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். 

கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்தால், அப்பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், சிறீதரனின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியை சட்டவிரோதமாக பறித்தமையை கண்டித்து கிளிநொச்சியில் நடைபெறும் அநீதிக்கான கண்டன கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை