வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்தச் சுழற்சி - இலங்கையின் பல பாகங்களில் கனமழை..!

​இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் இன்று (20.02.2026)ஆம் திகதி ஒரு புதிய காற்றழுத்தச் சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை அவதானிப்புகள் தெரிவிக்கின்றன. 

இது நாளை மறுநாள் ( 22.02.2026) ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக  வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு (20 - 22 பெப்ரவரி) நாட்டின் பல பகுதிகளில் வானிலை சீரற்றதாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

​கிழக்கு மாகாணத்திற்கு கடும் மழை எச்சரிக்கை

​குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

​ ஆற்றங்கரையோரங்கள், குளங்களின் வான் பாயும் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தங்கள் குறித்து மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​இன்று முதல் மழைப்பொழிவு பரவலடைந்து செறிவடையும். பெருநிலப்பரப்பின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
​மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வசிப்போர் நிலச்சரிவு அனர்த்தங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.

​இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகள் இன்று முதல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

​வழமையாக பெப்ரவரி முற்பகுதியில் விலக வேண்டிய வடகீழ் பருவக்காற்று, இம்முறை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்பாகக் கருதப்படுகிறது.

​இலங்கையின் நெற்செய்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணங்களில் தற்போது நடைபெற்று வரும் அறுவடை நடவடிக்கைகள், இந்தத் தொடர் கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

​தற்போது நிலவும் 'லா நினோ' நிலை மாறி, ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 'எல் நினோ' நிலை உருவாகவுள்ளது. இது எதிர்காலத்தில் கடுமையான வறட்சி, அதிக வெப்பம் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற சவால்களைத் தரக்கூடும்.

​"பருவநிலைக்கும் நெற்செய்கைக்கும் இடையிலான ஒத்திசைவு சீர்குலைந்துள்ளதால், துறை சார்ந்த நிபுணர்கள் உடனடியாக மாற்று வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது" என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை