அரசாங்க ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் திட்டத்தின் வட்டி வீதத்தில் 4 சதவீதத்தை அரசாங்கமே ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன்களுக்கு 96,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோல், அரச சேவைக்காக 73,000 பேரை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் துறைக்கு 10,000 பேரை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றத்தின் பயன்களை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டித்வா’ சூறாவளி பாதிப்புகளுக்காக கூடுதலாக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இழப்பீடு தொகைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக பணம் அச்சிடப்படவில்லை என்றும், திறைசேரியில் இருந்த நிதியே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வறுமையை ஒழிப்பது அரசின் முக்கிய இலக்காகும் என்றும், அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பிற்கு 11,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார மேலும் தெரிவித்தார்.