மட்டக்களப்பு மாவட்டம்
பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட அப்பிளாந்துறை, கடுக்காமுனை, பட்டிப்பளை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதான வீதிகளில் இரவு நேரங்களில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த விடயத்தில் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் இளையதம்பி திரேஸ்குமாரன் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்கள் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரம் உங்கள் கையில் - தயக்கம் ஏன்?
"அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் தயக்கம் இருந்தாலும், அவர்கள் வகிக்கும் பதவி அவர்களுக்குத் துணிச்சலைத் தர வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீதி விபத்துக்கள் ஏற்படும்போது சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துப் பதிவிடுவதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. தவிசாளர் என்ற ரீதியில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மக்கள் முன்வைக்கும் அதிரடித் தீர்வு:-
தவிசாளர் அவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பகிரங்க அறிவித்தல்:-
கால்நடை உரிமையாளர்களுக்கு 05 நாட்கள் கால அவகாசம் வழங்கி, இரவு நேரங்களில் கால்நடைகளை வீதிகளில் விடாது வீடுகளில் கட்டிப் பராமரிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை:-
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னரும் விதிகளை மீறும் உரிமையாளர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று பேருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மட்டுமே மற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்.
கால்நடைத் திருட்டுக்கு முற்றுப்புள்ளி:-
இரவு நேரங்களில் மாடுகள் திருடப்படுவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீதிகளில் மாடுகள் திரியாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் விபத்துக்களைத் தடுப்பதுடன், இத்திருட்டுச் சம்பவங்களையும் குறைக்க முடியும்.
துணிச்சலான முடிவை எடுப்பாரா தவிசாளர்?
தவிசாளர் இளையதம்பி திரேஸ்குமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களின் உயிரைப் பாதுகாப்பதும், வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதும் உங்கள் பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் தவிசாளரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.