மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திற்குச் செல்ல பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதிய பெண் ஒருவரிடம், மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து ரூ.35 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று (04.02.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த குறித்த முதிய பெண், புதூர் பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் மகளின் வீட்டிற்குச் செல்லும் நோக்கில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் பயணிகள் பஸ் வண்டியில் பயணித்து, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
புதூருக்குச் செல்லும் பஸ் வண்டி சற்று முன்னர் புறப்பட்டுச் சென்றிருந்த நிலையில், அடுத்த பஸ் வண்டிக்காக அவர் தரிப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளார். இச்சமயத்தில், மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர், குறித்த முதிய பெண்ணுடன் உரையாடி, அங்கு கள்ளர்கள் அதிகம் உள்ளதாகவும், தங்க நகைகளை அறுத்துச் செல்லக்கூடும் எனவும் கூறி, தன்னுடன் கொண்டு வந்த ‘யூஸ்’ பானத்தை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அந்த பானத்தை குடித்த பின்னர் முதிய பெண் மயக்கமடைந்த நிலையில், அவரின் கைப்பையில் இருந்த 5 பவுண் தங்க சங்கிலி, 2 அரைப் பவுண் காப்புகள் உள்ளிட்ட மொத்தம் 7½ பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பஸ் தரிப்பிடத்தில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த முதிய பெண்ணை அவதானித்த பெண் ஒருவர், அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கி, அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.