மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாததால் நாட்டில் தற்போது மாகாண அமைச்சர்கள் இல்லை, ஆளுநர்களே விடயங்களை கவனித்து வருகிறார்கள்.ஆகையால் ,அவசரமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் செவ்வாய்க்கிழமை (03.02.2026) பாராளுமன்றத்தில் கூறினார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,எம்.பி. தெரிவித்தார்.
"தித்வா" சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் தெல்தோட்டை பிரதேச மற்றும் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேதமடைந்துள்ள பாடசாலைகளை மதிப்பீடு செய்வதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இதுவரை வராததையும்,அமைச்சினால் போதிய நடவடிக்கை எடுக்கப்படாததையும் சுட்டிக்காட்டும் போதே கல்வி அமைச்சுக்குப் பொறுப்பான பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (3)பாராளுமன்றத்தில் கேள்வியொன்றின்போது இதனைக் குறிப்பிட்டார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிடம் தெல்தோட்டை,கம்பளை பிரதேசங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பாடசாலைகளை குறிப்பிட்டு கேள்வி கேட்டார்.
அதற்கு பிரதமர் பதில் அளிக்கும் போது, "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை'"என்ற திட்டத்தின் கீழ் கண்டி, தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும்,
நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையினால், அத்திட்டத்தின் கீழ், தரைத்தளத்தை மட்டுமே கட்ட முடிந்ததாகவும்,
தற்போது பிரஸ்தாப கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள நான்கு வகுப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு மாடிகளில் எட்டு வகுப்பறைகளை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன்,அதற்கான உத்தேச மதிப்பீடு 55 மில்லியன் ரூபாக்கள் என்றும், "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இக்கட்டிடத்தின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு இந்த ஆண்டு நிதி கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"தித்வா" சூறாவளிக்கு பின் தெல்தோட்டை முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அருகில் பியசேனபுர பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாகப் பாடசாலை விளையாட்டு மைதானம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு அண்மையில் உள்ள ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆரம்பப் பிரிவு கட்டிடங்களும் ஆபத்தான நிலையில் உள்ளன.
இது ஒரு பாடசாலை மட்டுமே.ஆனால்,கண்டி மாவட்டத்தில் இன்னும் சுமார் 150 பாடசாலைகள் இவ்வாறான நிலையை எதிர்கொண்டுள்ளன.
இதுவரை கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அதிகாரிகள் அங்கு வரவில்லை. இது குறித்து கவனம் செலுத்துமாறு கோரியும் எதுவும் நடக்கவில்லை.
கல்வி அமைச்சின் கட்டிடப் பிரிவு பொறியியலாளரையோ அல்லது கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளையோ அனுப்பி இந்தக் கட்டிடங்களைப் பரிசோதிக்க வேண்டும். தற்போது மாணவர்கள் ஆபத்தான கட்டிடங்களிலேயே கல்வி கற்று வருகின்றனர்.
எனவே, பொறியியலாளர்களை அனுப்பி இந்தக் கட்டிடங்களைப் பயன்படுத்த முடியுமா, இல்லையா என்பது குறித்து ஒரு தெளிவான அறிக்கையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் : "தித்வா" புயலுக்குப் பின் கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவினர் பாடசாலைகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்தப் பாடசாலை குறித்து அவர்களின் பரிந்துரை என்ன என்பதை நான் சரியாகக் கண்டறிய வேண்டும். பொறியியல் பிரிவு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) ஆகியவற்றின் அறிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் வைத்துள்ளோம். நிலச்சரிவு அபாயம் உள்ள பல பாடசாலைகள் உள்ளன. சிலவற்றை திருத்த முடியும், சிலவற்றை முழுமையாக அகற்ற வேண்டியிருக்கும்.
இதற்கான திட்டங்களை அமைச்சு தயாரித்து வருகிறது.
எனது இரண்டாவது துணைக் கேள்வி, கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்டது. பேரவில, படித்தலாவ மற்றும் பரணகல போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டு, மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.பரணகல பாடசாலை மாணவர்களுக்கு ஒரு விகாரையின் தர்மசாலையில் இடம் ஒதுக்கப்பட்டாலும், அங்குக் கல்வி கற்பதற்கான சூழல் சரியாக இல்லை, இடவசதியும் போதாது.
முஸ்லிம் பாடசாலைகளில் ஆண்டியாகடவத்த அல்-ஹிக்மா பாடசாலை நிலச்சரிவு அச்சுறுத்தலால் எந்தக் கட்டிடத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்காக யுனிசெப் (UNICEF) நிதி மூலம் தற்காலிக கட்டிடங்கள் மைதானத்தில் அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் மூன்று மாதங்களாகியும் இன்னும் எதுவும் நடக்கவில்லை. யுனிசெப் உடன் பேசி இந்த விலைமனுக் கோரல் நடைமுறைகளை விரைவுபடுத்தி தற்காலிக கட்டிடங்களை அமைத்துக் கொடுக்குமாறு கோருகிறேன்.
அதேபோன்று, கஹட்டபிட்டிய மினா வித்தியாலய ஆரம்பப் பிரிவைப் பயன்படுத்த முடியாதுள்ளது. அது இப்போது கம்பளை தேசிய பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஒரு நன்கொடையாளர் கட்டிடம் கட்டித் தர முன்வந்துள்ளார்.
ஆனால், அதற்கு மாகாண சபையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ரமழான் விடுமுறை காலத்திற்குள் தற்காலிக கட்டிடத்தை அமைத்து முடிக்க முடியும். இதற்கு மாகாண கல்வி அதிகாரி அனுமதி வழங்கினால் விரைவாகச் செய்ய முடியும்.
கம்பளை கல்வி வலயத்தில் முஸ்லிம்,சிங்கள, தமிழ் பாடசாலைகளில் இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன. மாகாண சபைத் தேர்தல் நடக்காததால் தற்போது அமைச்சர்கள் இல்லை, ஆளுநர்களே கவனித்து வருகிறார்கள். எனவே கல்வி அமைச்சு இது குறித்து ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் .அத்துடன்,அவசரமாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.
பிரதமர் : தற்போது சில தற்காலிக தீர்வுகளையே வழங்க முடிகிறது.
ஒவ்வொரு பாடசாலை குறித்தும் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு திட்டமிட்டு வருகிறோம். அவை சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்த மேலும் தகவல்களை நீங்கள் வழங்கினால் நான் அது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.