ஈழத்தமிழர் இதயங்களில் தனது காந்தக் குரலால் நீங்கா இடம் பிடித்த மாமனிதர் சாந்தன் அவர்களின் நினைவு நாளில், அவரது கலைப்பயணம் மற்றும் தேசப்பற்று குறித்த நினைவுகள் மீளவும் பகிரப்பட்டு வருகின்றன.
ஆரம்பகாலப் பயணம்:-
செக்கடித் தெரு முதல் வானொலி வரை
1972 ஆம் ஆண்டு கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாகப் பாடக் கிடைத்த வாய்ப்பே சாந்தன் அவர்களின் கலைப்பயணத்திற்கு அத்திவாரமிட்டது.
அன்று அவர் பாடிய 'மருதமலை மாமணியே முருகையா' பாடல், அங்கிருந்த ரசிகர்களைக் கட்டிப்போட்டது.
இதனைத் தொடர்ந்து, அமரர் முகத்தார் வீடு ஜேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'சிறுவர் மலர்' நிகழ்ச்சியில் அறிமுகமானார்.
அங்கிருந்து வானொலி நாடகங்கள், மேடை இசை எனத் தனது ஆளுமையை விரிவுபடுத்தினார்.
தாயகக் கலைஞனாக விஸ்வரூபம்
1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்த அவர், 1981 இல் 'கண்ணன் இசைக்குழுவில்' இணைந்தார். பின்னர் 1982 இல் 'சாந்தன் இசைக்குழு' என்ற பெயரில் சொந்தமாக இசைக்குழுவைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
தாயக விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்ற காலத்தில், தாயகக் கலைப்பண்பாட்டுக் கழகத்தின் முதன்மைப் பாடகராகத் திகழ்ந்தார். 1989 இல் வெளியான 'வானம் பூமியானது' அவரது முதல் பாடலாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து:-
அடங்கிக் கிடந்த தமிழன்
ஆனையிறவின் மேனி தடவி
ஆழக் கடலெங்கும் போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் போர்க்களத்திலும், மக்களின் இல்லங்களிலும் வீரத்தையும் எழுச்சியையும் விதைத்தன.
தியாகத்தால் உயர்ந்த தந்தை
சாந்தன் அவர்கள் ஒரு கலைஞனாக மட்டுமன்றி, தனது பிள்ளைகளையும் தேசத்திற்காக அர்ப்பணித்த ஒரு தியாகச் செம்மலாகவும் மதிக்கப்படுகிறார்.
அவரது மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன் (மோகன்ராஜ்) 1998 இல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்தார்.
இரண்டாவது மகன் மேஜர் இசையரசன் (பிரபுராஜ்) 2009 இல் கடற்படையின் டோறா கடற்கலத்தை மூழ்கடித்து கடற்கரும்புலியாகத் தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டார்.
தொடரும் கலைப் பாரம்பரியம்
தற்போது அவரது மகன் கோகுலன் ஒரு சிறந்த பாடகராகத் தந்தையின் வழியில் பயணித்து வருகிறார். தந்தையின் நினைவாக அவர் நடாத்தும் 'தேசம் சுமந்த பாடல்' போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
"சாந்தன் அவர்களின் குரல் என்பது ஒரு காலத்தின் சாட்சி. அந்தக் குரல் ஈழத் தமிழரின் வரலாற்றோடு என்றும் பின்னிப் பிணைந்திருக்கும்."