மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை பிரதேசத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடும் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளை பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை இன்று (03.02.2026)ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
பட்டிப்பளைப் பிரதேச சபையின் தவிசாளரும், மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் செயலாளருமான இ.திரசகுமாரன் அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்க இப்பரிசோதனைகள் இடம்பெற்றன.
நிறுத்தல் மற்றும் அளவை நியமங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த கள விஜயத்தை மேற்கொண்டு, வியாபாரிகளினால் பயன்படுத்தப்படும் தராசுகள் மற்றும் அளவீட்டு கருவிகளின் துல்லியத்தன்மையை ஆய்வு செய்தனர்.
நெல் விற்பனையின் போது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் சரியான அளவீடுகளை உறுதிப்படுத்தும் நோக்கொடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் போது தர நிர்ணயத்திற்கு முரணான வகையில் பயன்படுத்தப்பட்ட அனுமதியற்ற தராசு ஒன்று அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
நெல் அறுவடை காலங்களில் விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.