மருத்துவமனையில் இருந்தபோதும் கணிதப் பரீட்சை எழுதிய மாணவி –பொலிஸாரின் மனிதநேய செயல்.!

தந்தையால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாதாரண தர 
(O/L) பரீட்சை மாணவி,நேற்றைய தினம் (23) நடைபெற்ற கணிதப் பரீட்சையில் தோன்றியுள்ளார். 

இந்த முயற்சிக்கு அலுத்த்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தர்கா டவுனைச் சேர்ந்த இம்மாணவி, இவ்வருடக் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் தோன்றிவருகிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பரீட்சையை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், பின்னர் தன்னுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இளைய சகோதரியுடன் நண்பரின் இல்லத்திற்குச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வீடு திரும்பிய நேரம் தாமதமானதாகக் கூறி, அவர்களின் தந்தை கடும் கோபமடைந்ததாகவும், அதன்பின்னர் இரு மகள்களையும் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரு சகோதரிகளும் அலுத்த்கம பொலிஸில் முறையிட்டனர். பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு (Children and Women’s Bureau) அதிகாரிகள் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்தனர். பின்னர், முதற்கட்ட சிகிச்சைக்காக அவர்கள் அலுத்த்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நிலை மேலதிக சிகிச்சை தேவைப்பட்டதால், இருவரும் நாகொடா போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அலுத்த்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடி மனிதநேய நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்றையதினம் காலை, மருத்துவமனை அதிகாரிகளின் அனுமதியுடன், மூத்த சகோதரி கணிதப் பரீட்சையில் தோன்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொலிஸ் ஜீப்பில் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் உடன் சென்று, தேவையான உணவு, எழுதுபொருட்கள் மற்றும் அத்தியாவசிய வசதிகளுடன் மாணவியை பரீட்சை மையத்திற்குக் கொண்டு சென்றனர்.

மாலை 4.10 மணியளவில் பரீட்சை நிறைவடைந்ததும், அவர் மீண்டும் பொலிஸ் பாதுகாப்புடன் நாகொடா போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தாயின் பராமரிப்பு இன்றி தந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படும் இந்த இரு சகோதரிகளும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள தந்தையை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வி என்ற கனவை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாமல் தொடர முயன்ற இம்மாணவியின் மன உறுதியும், அவளுக்குத் துணை நின்ற பொலிஸாரின் மனிதநேய அணுகுமுறையும் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. குடும்பச் சிக்கல்களும் வன்முறைகளும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடாது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் மாறியுள்ளது.
புதியது பழையவை