மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 11,938 மில்லியன் நிதி ஒதுக்கீடு-அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் தீர்மானம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 11,938 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

​மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று  (27.03.2026) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். 

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

​நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட விபரங்கள்
​மாவட்டத்தில் மொத்தம் 2,177 திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நிதிப் பங்கீடு பின்வருமாறு அமையும்.


​மாவட்ட செயலகத் திட்டங்கள்:- 686 திட்டங்களுக்காக 2,072 மில்லியன் ரூபாய்.
​அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள்: -674 திட்டங்களுக்காக 3,626 மில்லியன் ரூபாய்.
​மாகாண சபை நிதி:-755 திட்டங்களுக்காக 2,908 மில்லியன் ரூபாய்.
​வெளிநாட்டு நிதி உதவி:-62 முக்கிய திட்டங்களுக்காக 3,330 மில்லியன் ரூபாய்.
​ஆராயப்பட்ட முக்கிய பிரச்சினைகள்
​இக்கூட்டத்தின் போது மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளாகக் கருதப்படும் பின்வரும் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவற்றுக்கான துரித தீர்வுகளை எட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.


​விவசாயம் மற்றும் கால்நடை,உரப் பிரச்சினை, நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் மேய்ச்சல்தரை பற்றாக்குறை.

​வீதிகள், பாலங்கள் அமைத்தல் மற்றும் சிறு குளங்களை புனரமைத்தல்.
​பாதுகாப்பு மற்றும் சூழல்,மனித-யானை மோதலைத் தவிர்க்க யானை வேலி அமைத்தல், முறையற்ற மண் அகழ்வைக் கட்டுப்படுத்தல்.

​குடிநீர் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் காணிப் பிரச்சினைகள்.

​அரசுத் திணைக்களங்களில் நிலவும் ஆளணியினர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்.
​பங்கேற்பாளர்கள்
​இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

​மேலும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
புதியது பழையவை