மட்டக்களப்பில் கொடூர கொலை, கொள்ளைக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - நீதிமன்றம் மற்றும் கச்சேரி முன்பாக பாரிய போராட்டம்!

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கொடூரமான கொலைச் சம்பவங்களைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் இன்று (27.03.2026) மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

​கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணைகளின் போது, அது வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்று வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையது என்பதும், கொள்ளையின் போது இக்கொலை இடம்பெற்றிருப்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டது.

​இது தொடர்பாக இதுவரை 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவரை 4 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், மற்றைய இருவரை இன்று (27.03.2026) வரை விளக்கமறியலில் வைக்கவும் மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இப்பாரிய போராட்டம் வெடித்தது.

​மனிதாபிமானமற்ற இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது.
கொலைகாரர்களைத் தூக்கிலிட வேண்டும் அல்லது இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றங்கள் நிகழாத வகையில் ஆகக்கூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

​காணாமல் போன பெண் குறித்து முன்னரே முறைப்பாடு செய்யப்பட்டும், பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

​மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி, மட்டக்களப்பு கச்சேரியை நோக்கி அமைதியான முறையில் நகர்ந்தது.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் வீதிகளில் பஸ்களைக் குறுக்கே நிறுத்தியும், கச்சேரியின் பிரதான நுழைவாயிலை மூடியும் தடுத்தனர். இதனால் கச்சேரிக்கு முன்னால் பதற்றமான சூழல் நிலவியதுடன், போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

​பின்னர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் வந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நால்வருடன் அவர் நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தை மற்றும் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

​இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நாற்பதாம் கிராம பொதுமக்கள், சிவில் அமைப்புகள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

​போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
புதியது பழையவை