தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துச் சேவையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று(06.03.2026)ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு, சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (06.03.2026) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
மாமனிதர் சிவநேசன் அவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் தூவி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
அவரது அரசியல் பணி மற்றும் மக்கள் நலனுக்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நினைவு கூரப்பட்டது.
மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்த கிட்டினன் சிவநேசன் அவர்கள், கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி வன்னியில் இடம்பெற்ற ஒரு கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது தேசப்பற்றையும், அயராத உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் அவருக்கு 'மாமனிதர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.