மட்டக்களப்பு ​போரதீவுப்பற்று புன்னங்குளத்தில் "உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" மாதிரிக் கிராமத் திட்டம் அங்குரார்ப்பணம்!

"உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில், சமூக உற்பத்தித்திறன் நாடாளாவிய மாதிரிக் கிராமத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னங்குளம் கிராமத்தில் நேற்று (16.03.2026)ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து கௌரவமாக வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், சமூக உற்பத்தித்திறன் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு காணொளியும் திரையிடப்பட்டது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக புன்னங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான எதிர்கால சமூக உற்பத்தித் திட்ட வழிகாட்டிக் கையேடுகள் மற்றும் பசுமைப் புரட்சியை ஊக்குவிக்கும் வகையிலான மரக்கன்றுகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி ம.மனோதினி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி திட்டத்தின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

​இத்திட்டத்தின் மூலம் புன்னங்குளம் கிராமம் உற்பத்தித் திறனில் தன்னிறைவு அடைந்து, ஏனைய கிராமங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை