சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள போர்க்காலச் சூழல் மற்றும் வலுசக்தி (எரிசக்தி) நெருக்கடியை வெற்றிகொள்ள அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (17.03.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவரது உரையின் முக்கிய செய்திகள் வருமாறு:
உலகளாவிய மோதல்களின் போது இலங்கை எக்காலத்திலும் நடுநிலை வகிக்கும் என ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார். இந்த நடுநிலைப்போக்கு சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு அழுத்தம் ஏற்படினும் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி மற்றும் நிலக்கரி விநியோகம்
சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தாமதமாகும் கப்பல்களுக்குப் பதிலாக துரித கொள்முதல் (Spot Purchase) மூலம் டீசல் மற்றும் பெற்றோலைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதத் தேவையை விட அதிகளவு எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நாளை அல்லது மறுதினம் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வந்தடையவுள்ளது.மேலதிகமாக 5 கப்பல்களில் நிலக்கரியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
QR முறைமை மற்றும் விசேட துறைகள்
எரிபொருள் கையிருப்பை சிக்கனமாகப் பயன்படுத்தவே QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். எனினுமசிறுபோக விவசாயிகளுக்கும், 30,000 சிறு படகுகளைக் கொண்ட மீனவர்களுக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. டொலர் வருமானம் ஈட்டும் இந்தத் துறையினர் நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் கட்டுப்பாடுகள்
அரசாங்கத் துறையில் எரிபொருள் நுகர்வை 25% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு, அத்தியாவசியமற்ற பயணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய இறக்குமதியாளர்களுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
"இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய பொருளாதார கண்காணிப்புக் குழு மற்றும் விசேட அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தரவுகளின் அடிப்படையில் நாம் துரித முடிவுகளை எடுத்து வருகிறோம். எவரும் குழப்பமடையத் தேவையில்லை," என ஜனாதிபதி தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.