​அமெரிக்காவை பகைத்துக் கொள்ள இலங்கை அரசு அஞ்சுகிறது.! நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் காட்டம்!


"அமெரிக்காவை பகைத்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கடுமையாகச் சாடினார்.

​வியாழக்கிழமை (19.03.2026) நடைபெற்ற மத்திய கிழக்கு போர் நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு...

​ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துரதிர்ஷ்டவசமான போர், உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட பெரும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் 'அப்பார்த்தைட்' (இன ஒதுக்கல்) நாடான இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து பாலஸ்தீனியர்களுக்கு எதிராகக் கடுமையான இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த அரசாங்கத்திற்கு அதை விமர்சிக்க முதுகெலும்பு இல்லை.
​ஈரானியர்கள் "எங்களுக்கு நோவிநே ஏற்பட்டால், நீங்களும் அதை அனுபவிப்பீர்கள்" என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். இன்று இலங்கையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினால், அனைத்து சமூகங்களும் ஈரானுடன்தான் நிற்கும், அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்ல. ஆனால், அமெரிக்கர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக உள்ளது.


​நமது கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய கப்பல் ஒன்று தாக்கப்பட்டபோது, முடிவெடுக்க அரசாங்கம் 11 மணிநேரம் எடுத்துக்கொண்டது. அந்த கப்பலை நமது துறைமுகத்திற்கு வர அனுமதித்திருந்தால் 100 மாலுமிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்கள் பயிற்சி பெறும் வீரர்கள் (Cadets). சர்வதேச உடன்படிக்கைகளின்படி அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருந்தது. ஆனால், நமது வெளியுறவு அமைச்சரோ இது குறித்துக் கேட்டபோது சம்பந்தமில்லாமல் 'பச்சை பொருளாதாரம்' பற்றிப் பேசுகிறார். நமது வெளியுறவுக் கொள்கை குழப்பமடைந்துள்ளது.

​நட்பு நாடுகளுடனான உறவில் விரிசல்
​ஜனாதிபதியின் இப்தார் நிகழ்விற்கு மலேசியா, இந்தோனேசியாவைத் தவிர மற்ற வளைகுடா நாடுகள் வராதது கவலையளிக்கிறது. நமது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் நாம் எல்லாப் பக்கங்களிலும் நண்பர்களை இழந்து வருகிறோம். தற்போதைய ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது, ஆனால் இப்போது அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டது.

​நாட்டின் தற்போதைய நெருக்கடியால் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் முதல் வெள்ளி வரை நாடாளுமன்றம் கூடும் நிலையில், புதன்கிழமை விடுமுறை என்பது தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் எம்.பி-க்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களின் பிரச்சினைகளைப் பேச ஏதுவாக, இந்த விடுமுறையை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
புதியது பழையவை