மத்திய கிழக்கில் யுத்தம் நீங்கி அமைதி நிலவ பிரார்த்திப்போம்-ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தி.!


மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து, அங்கு நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு இந்த ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

​அவர் விடுத்துள்ள விசேட பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

​ஆன்மீகப் பயிற்சியும் தற்போதைய சூழலும்
​புனித ரமழான் மாதம் என்பது ஆன்மீகப் புத்தெழுச்சி மற்றும் தியாக மனப்பான்மையுடன் இறைவனுடன் நெருக்கமான தொடர்பைப் பேணக்கூடிய ஒரு சிறந்த காலமாகும். எனினும், இந்த ஆண்டு உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் மிகவும் துயரமானதொரு காலத்திலேயே இந்தப் புனித மாதத்தைக் கடந்து வந்துள்ளனர்.

​விசேடமாக, மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் ஈவிரக்கமற்ற யுத்த கெடுபிடிகளால் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் இம்முறை நாம் ஒரு கனத்த இதயத்துடனேயே இந்தப் பெருநாளைச் சந்திக்கிறோம்.

​சகிப்புத்தன்மையும் தியாகமும்
​ரமழான் மாதம் நமக்கு தியாகத்தையும் விடாமுயற்சியையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் சகிப்புத்தன்மையுடன் நோன்பின் மாண்புகளைப் பேணி வருவதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

​மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து கவலை
​காஸா மற்றும் பலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் மூர்க்கமான தாக்குதல்கள் மற்றும் ஈரான் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள யுத்தச் சூழல் காரணமாக உயிரிழப்பவர்களுக்காகவும், துன்புறுபவர்களுக்காகவும் எமது இதயங்கள் இரத்தத்தைச் சிந்துகின்றன.

​மத்திய கிழக்கில் நிலவும் இந்த யுத்தச் சூழல் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். அங்கு நீதியும், நிரந்தர சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாம் உருக்கமாகப் பிரார்த்திக்கிறோம்.

​சகோதரத்துவ அழைப்பு
​இந்தப் பெருநாள் எமது சகோதரத்துவப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட நாம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் தனது இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை