இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க முன்னெடுத்த தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவில், மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீரர் அழகராஜ் லதுர்சன் தெரிவு செய்யப்பட்டு சாதனையைப் படைத்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டித் தேர்வில் 3500-க்கும் மேற்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் ஆரம்பக் கட்டத்திலேயே தனது அபார திறமையை நிரூபித்த லதுர்சன், இறுதிப் பட்டியலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக, மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவரது திறன் கிரிக்கெட் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டும் விதமாக, முக்கிய பிரதிநிதிகள் லதுர்சனின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரை வாழ்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர், தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
"மட்டக்களப்பு மண்ணில் உலகத் தரத்தில் விளையாடக்கூடிய திறமைகள் புதைந்து கிடக்கின்றன என்பதற்கு லதுர்சன் ஒரு சிறந்த உதாரணம். அவரது எளிமையும், விளையாட்டின் மீதான உறுதியும் எம்மை வியக்க வைக்கிறது.
அவர் தொடர்ந்து கடினமாகப் பயிற்சி செய்து இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து எமது மண்ணிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்."
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் விளையாட்டுத் துறையில் மட்டக்களப்பு வீரர்கள் தேசிய மட்டத்தில் சாதிப்பது இப்பகுதி இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான பயிற்சிகளும் சர்வதேச தரத்திலான வழிகாட்டல்களும் கிடைக்கும் பட்சத்தில், லதுர்சன் எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்பது திண்ணம்.