மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்,தாந்தாமலை,நெல்லிக்காட்டில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி, (27.03.2026)ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள தாந்தாமலை, நெல்லிக்காட்டில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து (20.03.2026)ஆம் திகதி காலை பெண் ஒருவரின் சடலமும், காயமடைந்த நிலையில் மற்றொரு பெண்ணும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் போரதீவுப்பற்று , நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த (28.02.2026) ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று(26.03.2026)ஆம் திகதி மாலை பாதிக்கப்பட்ட நளாயினியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களிடம் அக்குடும்பத்தினர் ஒருமித்த கோரிக்கையை முன்வைத்தனர்.
"இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது" என அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவல்துறையின் அலட்சியம் குறித்து தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், "பெண் காணாமல் போனதாகத் தகவல் வழங்கப்பட்ட பின்னரும், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுப்பதில் காட்டிய மந்தகதியே இத்தகைய அடுத்தடுத்த குற்றச்செயல்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாதது," எனக் குறிப்பிட்டார்.
போரதீவுப்பற்று ,நாற்பதாம் கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான பேரணி, இன்று(27.03.2026) ஆம் திகதி காலை 08:00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கச்சேரி வரை சென்றடையவுள்ளது.
இப்போராட்டத்தில் தானும் நேரடியாகக் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் இந்தப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சந்திப்பின் போது போரதீவுப்பற்று ,களுதாவளை பிரதேசசபையின் தவிசாளர்கள்,உபதவிசாளர்கள்,உறுப்பினர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.