உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகள், நிதி மேலாண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் அனைத்துச் செயலாளர்களுக்கும் முக்கிய பணிப்புரைகளை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் M.R.F. ரிப்காவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட சுற்றுநிருபத்தில், சபைகளின் நிர்வாகம் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்த 12 முக்கிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முக்கிய உத்தரவுகள்:-
சபை கூட்டங்கள் பிரதேச சபை மற்றும் நகர சபை சட்டங்களுக்கு அமைவாகவே கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
கூட்ட அறிக்கைகளை (Minutes) தயாரித்து உரிய முறையில் தமது அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சொத்துக்கள் பராமரிப்பு:-
சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுவதை செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பணியாளர் விபரங்கள்:-
உத்தியோகத்தர்களுக்கான வேலைப்பகிர்வு மற்றும் கடமைப்பட்டியல் தொடர்பான விபரங்கள் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வருமான அதிகரிப்பு:-
சபைகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
கழிவு முகாமைத்துவம்:-
தின்மக்கழிவு அகற்றல் மற்றும் தரம் பிரித்தல் (Segregation) முறையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
முறையற்ற கழிவு முகாமைத்துவத்தால் ஏற்படும் விளைவுகளுக்குச் செயலாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
பாதுகாப்பு நடைமுறைகள்:- அலுவலகத் திறப்புக்கள் (Key Box) மற்றும் பாதுகாப்பு விபரங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும். குறிப்பாக அலுவலகம் திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.
திட்ட அறிக்கைகள்:-
திட்ட முன்மொழிவுகள் (Project Proposals), மதிப்பீடுகள் மற்றும் கொள்முதல் விபரங்கள் கோரப்படும் சரியான வடிவத்தில் (Format) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கண்டிப்பான அறிவுறுத்தல்:-
உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் கோரப்படும் தகவல்களை வாட்ஸ்அப் (WhatsApp), மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ குறித்த காலப்பகுதிக்குள் வழங்கத் தவறினால், அதனால் ஏற்படும் தாமதங்களுக்குச் செயலாளர்களே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் வழங்கும் புகார்களை உரிய காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதையும் செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.