பிள்ளையானின் சட்டப் போராட்டத்தில் புதிய திருப்பம்.!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம், அவரின் சட்டத்தரணி ஆலோசனை நடத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போது, இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், 2016 ஆம் ஆண்டு தாம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, பிள்ளையான் குறித்த அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன்போது, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது சேவை பெறுநரான பிள்ளையானுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, அவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பிள்ளையான் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டார்.

எனினும், பிரிதொரு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம், ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி மன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

இதன்போது, பிள்ளையானிடம் வழக்கு தொடர்பான ஆலோசனைகளை அவரின் சட்டத்தரணி பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய அணுகல் முறைகள் காணப்படுகிறதா? என நீதியரசர்கள் குழாம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இதன்போது கேள்வி எழுப்பியது.

மனுதாரர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி இந்த விடயம் தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கையை சமர்பிக்கும் பட்சத்தில், அதற்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்த முடியும் என சட்ட மாஅதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா அறிவித்தார்.

அதன்படி, பிள்ளையானிடம் அவரின் சட்டத்தரணி ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான அணுகல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, சட்ட மாஅதிபருக்கு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை