2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த.சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் என அனைத்து பரீ்டசைகளையும் ஒத்திவைப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து மாணவர்களிடையே நிலவுகிறது.
எனினும், பரீட்சைகள் திணைக்களம் அத்தகைய எந்த முடிவையும் எடுக்காததால், மாணவர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட திகதி மேற்படி பரீட்சைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், ஏப்ரல் 24 வரை இணையவழியில் வரவேற்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தோடு, தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தித் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.