நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வழிகாட்டலில், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம் மற்றும் வாகரை சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடத் தொகுதிகள் நேற்று (27.03.2026) உத்தியோகபூர்வமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டன.
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எம்.எம்.றதீப் அஹமட் அவர்களின் தலைமையில், வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் நிகழ்நிலையூடாக (Online) கலந்துகொண்டு, நீதிமன்றக் கட்டடத் தொகுதிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததுடன் பிரதம அதிதி உரையையும் ஆற்றினார்.
இந்நிகழ்வில் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீதிபதி டீ.ஜே.பிரபாகரன் (மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்)
நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் (மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றம்)
நீதிபதி ஐ.பயாஸ் றசாக் (மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம்)
நீதிபதி கே.மதுன்ஞலா (மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி)
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசிக் (தலைவர், வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கம்)
மேலும், வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள், முப்படைகளின் கட்டளைத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்த புதிய நீதிமன்றக் கட்டடங்கள் இப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்வதுடன், நீதித்துறைச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.