இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என , அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிகிறாரா? எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிகிறாரா?
கப்பல் விவகாரத்தில் கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்தார்.
குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்தால் வான்வழித் தாக்குதல் (Air Strikes) நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இராணுவக் கண்காட்சிக்குச் சென்ற மூன்று ஈரானியக் கப்பல்களில் ஒன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பிற்கு அப்பால் ஆழ்கடலில் நிலைகொண்டுள்ளது.
இந்தக் கப்பல் நேற்று (04.03.2026) மாலை முதல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த கப்பல் இராணுவ நடவடிக்கைகளுக்காக வரவில்லை எனவும், தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது அத்தியாவசியத் தேவைகளுக்காகவே அனுமதி கோருவதாகவும் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இலங்கையின் அணிசேராக் கொள்கையை (Non-aligned foreign policy) ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய விமல் வீரவங்ச, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.