2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 15.8 பில்லியன் ரூபா வருமான பற்றாக்குறையை ஈடுகட்டும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.
மின்சார சபையின் கணிப்பின்படி, குறித்த காலப்பகுதிக்கான மொத்தச் செலவு 136.5 பில்லியன் ரூபாவாக இருக்கும் நிலையில், தற்போதைய கட்டண விகிதங்களின் கீழ் எதிர்பார்க்கப்படும் வருமானம் 116.9 பில்லியன் ரூபாவாக மட்டுமே உள்ளது. இதனால் உருவாகும் நிதி இடைவெளியை சமன்படுத்த, அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் ஒரே அளவில் கட்டண உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செலவினங்களில் மின் உற்பத்திக்கே அதிகபங்கு (96.3 பில்லியன்ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விநியோகம் (26.3), நிதிச் செலவுகள் (7.9) மற்றும் மின் கடத்துகை (6.0) ஆகியவை இடம்பெற்றுள்ளன.இரண்டாம் காலாண்டில் மொத்த மின் தேவை 4,577 GWh என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி (30.64%), நிலக்கரி (30.19%), நீர்மின் (26.6%) மற்றும் எண்ணெய் (12.57%) ஆகியவற்றின் பங்களிப்பில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மின்சார சபை சமர்ப்பித்துள்ள செலவுக் கணக்குகள் குறித்து பொதுப்பயன்பாடுகள்ஆணைக்குழு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நுரைச்சோலை மின்நிலையத்தின் உற்பத்தி குறைப்பு மற்றும் அதிகரித்த செலவுகள் தொடர்பில் மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம், பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆணைக்குழுவின் விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.