12 வயதுடைய சிறுமி ஒருவரை, அவர் 10 வயதாக இருக்கும் காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அக்கா கணவனும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் மூத்த சகோதரியும் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ முகாம் ஒன்றில் சிவில் ஊழியராகப் பணியாற்றும் 40 வயதுடைய ஒருவரும், அவரது மனைவியான 22 வயதுடைய பெண்ணுமாவர்.
சிறுமி, கடந்த 2023ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் தனது மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது, சகோதரியின் கணவர் , 2024 ஜனவரி மாதம் வரை பல சந்தர்ப்பங்களில் சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அது குறித்து பலமுறை தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், சகோதரி இது குறித்து எவ்வித சட்ட நடவடிக்கையோ அல்லது பாதுகாப்பையோ வழங்காமல் மௌனம் காத்துள்ளார்.
அதேவேளை, சந்தேகநபர் சம்பவம் குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என சிறுமியை அச்சுறுத்தி பயமுறுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள நிலையில் , திரப்பனை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.