மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் இன்று (08.03.2026) ஆம் திகதி விசேட மகளிர் தின நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​சமூக செயற்பாட்டாளர் ரஜனி ஜெயப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் உரிமைகள், சமூக மேம்பாடு மற்றும் எதிர்கால சவால்கள் குறித்த முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினர்.

​மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுஜாராஜினி வரதராஜன், ஓய்வுநிலை ஆசிரியரும் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினருமான திருமதி சரஸ்வதி விஜயநாதன், பாடுமீன் சுவஹாஸ் பூ வளர்ப்போர் சங்க ஆலோசகர் பிரபா செல்வராசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
​சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மற்றும் பங்காற்றிய பெண்களின் சேவைகள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

​மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு உரைகள் வழங்கப்பட்டன.

​பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான சட்ட ரீதியான, சமூக ரீதியான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

​இந்நிகழ்வில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காரமுனைப் பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

பின்தங்கிய கிராமப்புற பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் நோக்கில் அமைந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
புதியது பழையவை