ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , 'Truth Social' தளத்தை மேற்கோள் காட்டி , இன்று இரவு ஒரு பாரிய அழிவு ஏற்படக்கூடும் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன.
"இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது" என தனது பதிவை ஆரம்பித்துள்ள ட்ரம்ப், அவ்வாறு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், அது அநேகமாக நடக்கும் என்றே தோன்றுவதாகக் டொனால்ட் ட்ரம்ப் , குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் , ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தீவிரவாத சிந்தனையற்ற அறிவுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, புரட்சிகரமான மற்றும் அற்புதமான மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் 47 வருடகால ஊழல், மிரட்டல் மற்றும் மரணங்கள் இன்றுடன் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ள அவர், "யார் அறிவார்? உலக வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமையப்போகும் இன்று இரவு என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரானிய மக்களுக்கு கடவுள் ஆசி வழங்கட்டும்" என பதிவிட்டுள்ளார். ஈரானின் கார்க் தீவு மீது இன்று காலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் உலக நாடுகளுக்கும் டிரம்பின் பதிவு பீதியை ஏற்படுத்தியுள்ளது.