​உயிர்த்த ஞாயிறு விசாரணை - அரசாங்கத்திற்கு அழுத்தம் இருக்கிறதா? - சபையில் ரவூப் ஹக்கீம் கேள்வி.!

​உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களம் போதிய ஒத்துழைப்பை வழங்கத் தவறுவது, தற்போதைய அரசாங்கத்தின் மீது ஏதேனும் மறைமுக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

​நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​சட்டமா அதிபர் திணைக்களத்தின் மெத்தனப்போக்கு
​விசாரணையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையாகாமை குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். 

குறிப்பாக, புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சாலே தொடர்பான பிணை மனு பரிசீலனைக்கு வந்தபோது, திணைக்கள அதிகாரிகள் எவரும் சமூகமளிக்காததால் நீதவானின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

​இவ்வாறான முக்கியமான வழக்குகளில் ஒத்துழைப்பு வழங்கப்படாதது ஏன்? அரசாங்கத்தின் மீது ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா?என அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

​விசாரணை அதிகாரிகள் மீதான நம்பிக்கை
​ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய உயர் பொலிஸ் அதிகாரிகள் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஹக்கீம், அவர்களுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே விசாரணைகள் புதிய திசையில் நகரும் எனத் குறிப்பிட்டார்.

​மறைக்கப்பட்ட சாட்சியங்கள்
​விசாரணையில் உள்ள ஓட்டைகள் குறித்துப் பேசிய அவர் பின்வரும் முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

​சஹ்ரானின் மனைவி ஹாதியாவை ஒரு குற்றவாளியாகப் பார்க்காமல், அவரை ஒரு சாட்சியாகப் பயன்படுத்தியிருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும்.
​வெளிநாட்டவர்களின் மர்மம்,குண்டுவெடிப்பு நடந்த ஹோட்டலில் சஹ்ரானுக்கு அருகிலுள்ள அறையில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டவர்கள், விசாரணையின்றி நாட்டை விட்டு வெளியேறியது குறித்து தேடப்பட வேண்டும்.

​ஆசாத் மௌலானா சனல் 4 விவகாரத்தில் தொடர்புடைய ஆசாத் மௌலானாவின் சாட்சியத்தை, நவீன சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தித் தொலைதூரத்தில் இருந்தாவது பதிவு செய்ய வேண்டும்.

​ஈரானிய மாலுமிகள் விவகாரம்
​தமது உரையின் போது மனிதாபிமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்த ஹக்கீம், ஈரானியக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டு இலங்கையில் தங்கியுள்ள இளம் பயிற்சி மாலுமிகளை, தற்போதைய போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி உடனடியாக ஈரானுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

​இந்த விசாரணையின் இறுதி நோக்கம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு அரசாங்கம் நேர்மையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
புதியது பழையவை