மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதாரவைத்திய பிரிவில்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த (08.04.2026 )அன்று பொதுமக்கள் தரமான உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திடீர் சோதனையிடல் முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதியிலுள்ள பலசரக்குக் கடைகள் மற்றும் உணவகங்கள் இதன்போது தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தச் சோதனை நடவடிக்கையானது, மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் கே. இளங்கோவன் அவர்களின் வழிகாட்டலில், பொது சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சிவசுதன் மற்றும் எஸ். விக்னேஸ்வரராஜா,எஸ்.ஜீவிதன், உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குப் பாதுகாப்பற்ற அல்லது காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் சில பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டன.
சுகாதார விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறிச் செயற்பட்ட நான்கு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்:
பண்டிகைக் காலங்களில் நுகர்வோர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.