குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

மட்டக்களப்பு மாவட்டம்  குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மூன்று நாட்களின் பின்னர் இன்று (01.04.2026) மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு - கல்முனை வீதியூடாகப் பயணம் செய்தபோது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் 170 முஸ்லிம் மக்கள், குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக நீண்டகாலமாகச் சந்தேகிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பான வழக்கினை விசாரித்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம், குறித்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மூன்று நாட்களாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு சோதனையிடப்பட்டது.

மூன்று நாட்கள் தோண்டப்பட்ட போதிலும், குறித்த இடத்தில் மனித உடல் எச்சங்கள் அல்லது தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, முதற்கட்டமாகத் தோண்டப்பட்ட இடத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இன்றையதோடு அகழ்வுப் பணிகளும் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளன.

அகழ்வுப் பணிகள் முற்றாகக் கைவிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் சந்தேகிக்கப்படும் ஏனைய இடங்களை நவீன ஸ்கேன் (Scan) தொழில்நுட்பத்தின் மூலம் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், நீதிமன்றத்தின் மேலதிக அனுமதியுடன் ஏனைய இடங்களில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை