மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் மனித - யானை மோதலின் காரணமாக மற்றுமொரு உயிர் பறிபோயுள்ளது.
உன்னிச்சை பகுதியில் இன்று (01.04.2026)இடம்பெற்ற காட்டுயானை தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, உன்னிச்சை எட்டாம் கட்டை பகுதியில் இன்று (ஏப்ரல் 01) காட்டுயானை ஒன்று திடீரென முதியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 69 வயதான ஐயாத்துரை கந்தசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
முறையான பாதுகாப்பு வேலிகள் இல்லாமை மற்றும் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் காடுகளை அண்டிய பகுதிகளுக்குச் செல்லும்போது இவ்வாறான அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான உயிரிழப்புகளைத் தடுக்கவும், மனித - யானை மோதலுக்கு நிரந்தர தீர்வை காணவும் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கவலையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.