சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மட்டக்களப்பு - திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் "கலாசார விளையாட்டு விழாவானது (25.04.2026)ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மிக விமரிசையாக ஆரம்பமானது.
சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. அ.பதிகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ.ரங்கநாதன் அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டார்.
மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இவ்விழாவில், பாரம்பரிய கலாசார விளையாட்டுகள் மற்றும் தடகளப் போட்டிகள் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் ஊரின் இளையோர் மற்றும் பெரியோர் எனப் பலரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள், வைத்திய நிபுணர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், கௌரவ அதிதிகளாக வங்கிகளின் கிளை மேலாளர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருகை தந்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
மக்களிடையேயான ஒற்றுமையை வளர்க்கவும், கிராமியக் கலை மற்றும் விளையாட்டுக்களைப் பாதுகாக்கவும் இவ்வாறான விழாக்களின் அவசியம் குறித்து இதன்போது உரையாற்றிய அதிதிகள் சுட்டிக்காட்டினர்.
நிகழ்வின் இறுதிப் பகுதியில் சாதனையாளர் கௌரவிப்பும், வெற்றியாளர்களுக்கான கிண்ணங்கள் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.